32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டில் மறைந்து போன தெரு பெயர் பலகைகள்; போஸ்டர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Editor Published: August 12, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள தெரு, வீதி மற்றும் முக்கிய சாலைகளுக்கான பெயர் பலகைகளில் சினிமா மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், பெயர்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கும், வெளியூரில் இருந்து நகருக்கு வருபவர்களுக்கும் குறிப்பிட்ட தெருக்கள் மற்றும் வீதிகளை எளிதில் அடையாளம் காணவும், முகவரிகளை கண்டறியவும் இந்த பெயர் பலகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட சேவைகள் குறிப்பிட்ட பகுதிகளை விரைவாக சென்றடையவும் பெயர் பலகைகள் உதவுகின்றன.

இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெயர் பலகைகளின் மீது சினிமா போஸ்டர்கள், தனியார் நிறுவன விளம்பரங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து ஒட்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பெயர் பலகைகள் முழுவதுமாக போஸ்டர்களால் மறைக்கப்பட்டுள்ளதால், தெரு மற்றும் வீதிகளின் பெயர்களை அறிந்து கொள்வதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி சொத்துகளை விளம்பரத்திற்காக பயன்படுத்துவதுடன், பெயர் பலகைகளின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் 33 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், அரசு மற்றும் நகராட்சி பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுபவர்களை கண்டறிந்து, அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

About The Author