
தேசிய சிந்தனை பேரவை சார்பில், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், உலகம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் திகழ வேண்டியும் பித்ரு தர்ப்பண பூஜை மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
புரட்டாசி மஹாளய பட்ச அமாவாசை நாளில் மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திருச்செங்கோடு தெற்கு கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலய வளாகத்தில் தேசிய சிந்தனை பேரவை சார்பில் பித்ரு தர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கேற்று பித்ரு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பூஜையில் அரிசி மாவு உருண்டைகள், எள், பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடையவும், உலகம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் திகழவும் அனைவரும் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர், அருகிலிருந்த மலை அடிவாரக் குட்டையில் மாவுப் பிண்டங்களைச் சமர்ப்பித்து, வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி சூரியனை நோக்கி வழிபட்டனர். இதையடுத்து பித்ரு தர்ப்பண பூஜை நிறைவடைந்தது.