
அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.17 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், அக்கட்சிப் பிரமுகர் ஒருவரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி. மாதேஸ்வரன் பெயர்ப் பலகைகளைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த அக்கட்சிப் பிரமுகர் லோகேந்திரனை ஒருமையில் திட்டியதுடன், “வெளியே போடா” எனச் சத்தமாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த பாஜகவினர் லோகேந்திரனை விழா அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொது நிகழ்ச்சியில் மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர், தனது கட்சியைச் சேர்ந்தவரிடமே இவ்வாறு பேசிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.