
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கரட்டுப்பாளையத்தில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. தீ விபத்தில் காயமடைந்த ஜோதி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதி, கணவரைப் பிரிந்து தனது பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் இவர், குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு ஜோதி தனது குழந்தைகளுடன் ஓங்காளியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்து புகை வருவதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், தொலைபேசி மூலம் ஜோதிக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீடு திரும்பிய ஜோதியும் அவரது குழந்தைகளும், வீடு முழுவதும் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் காயமடைந்த ஜோதி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் அருண்ராஜ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜோதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகையும், தனது சொந்த நிதியிலிருந்து தேவையான உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக நகரச் செயலாளர் நாகராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜோதியை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ஜோதியின் குடும்பத்தினர் தற்காலிகமாகத் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்ததுடன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கினர்.
மேலும், தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த குழந்தைகளின் கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.