32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம்; அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து 3 நாள் போராட்டம் வாபஸ்.

Editor Published: July 25, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில், மாற்று வீட்டுமனை வழங்கக் கோரி 3-வது நாளாக பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்பிலி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நிரம்பி வழிவதால், மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், பாதுகாப்பான மாற்று இடம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த ஓராண்டாக அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்று ஏரியில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று 3-வது நாளாக பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந. வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. சுரேஷ், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கெ.செ. செந்தில்குமார், தமிழ் புலிகள் கட்சியின் செந்தமிழன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி. பழனியம்மாள், பி. கவிதா, மாராப்பம்பாளையம் கிளை செயலாளர் பி. தங்கவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், மகேந்திரன், கிளை செயலாளர் லட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஆர்டிஓ ச. லெனின், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் வருவாய் ஆய்வாளர் அருண் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீட்டுமனை நிலம் பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

About The Author