நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக சேவையாளர் முத்தையா பூல் பாண்டியன், பொது இடங்களில் தர்மம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையா பூல் பாண்டியன், தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலனிடம் வழங்கினார்.
அப்போது, கலெக்டர் மதுபாலன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் எழுந்து நின்று கைத்தட்டி அவரது சேவையை பாராட்டினர். மேலும், நன்கொடைக்கான உரிய ரசீதை வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் முத்தையா பூல் பாண்டியன், தர்மம் மூலம் பெற்ற தொகையை நிவாரண நிதிக்கு வழங்குவது இது 3-வது முறையாகும்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 51 ஆண்டுகளாக பொது இடங்களில் தர்மம் பெற்று, அந்த தொகையை பல்வேறு மாவட்ட கலெக்டர்களிடம் நிவாரணப் பணிகளுக்காக வழங்கி வருவதாக தெரிவித்தார்.
ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி, கொரோனா நிவாரணம் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இதுவரை சுமார் ரூ.1 கோடியே 60 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் முத்தையா பூல் பாண்டியன் தெரிவித்தார்.