
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ஜோதி தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டைப் பூட்டிவிட்டு ஓங்காளியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, வீட்டிலிருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தம்பதியினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விரைந்து வந்த சிவக்குமார், ஜோதி ஆகியோர் பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.