32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும்.

Editor Published: October 1, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

பாரதி புத்தகாலயம் சார்பில் நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்று, ஆன்மீகம், அறிவியல், பகுத்தறிவு, நாட்டுப்புறக் கதைகள், மருத்துவம், கல்வி, அரசியல், விடுதலை வீரர்களின் வரலாறு, சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர்.

புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் அக்டோபர் 1-ம் தேதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வர் பாரதி, புத்தகங்கள் ஒருவரின் சிந்தனையையும் எண்ணங்களையும் மாற்றும் சக்தி கொண்டவை என்றார்.

இன்றைய காலத்தில் கூகுள், சமூக வலைதளங்கள் மற்றும் காணொலி குறுந்தொடர்களில் அதிக நேரம் செலவிடுவதால் கண்களுக்கும் மனதுக்கும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாக குறிப்பிட்ட அவர், புத்தக வாசிப்பு சிந்தனையை மேம்படுத்தும் என்றார்.

மேலும், புத்தகங்களில் இடம்பெறும் கருத்துகள் நமக்குள் கனவுகளை உருவாக்குகின்றன என்றும், அந்தக் கனவுகள் நல்ல எண்ணங்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார். சிரமமாக இருந்தாலும் தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினால் அது நாளடைவில் இனிமையாக மாறும் என்றும், அனைவரும் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய இளைய தலைமுறையினர் புத்தகம், நோட்டு, பேனா இல்லாமல் இருக்கும் நிலை உருவாகி வருவதாகக் கூறிய அவர், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் புத்தகங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

About The Author