நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோட்டில் டிசிஎம்எஸ் எதிரே உள்ள பழமையான வணிக கட்டிடத்தின் கீழ்பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
வேலூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு மாடி கொண்ட பழமையான வணிக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும், பின்பகுதி மற்றும் மேல்மாடியில் மேன்சனும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மேன்சனில் வடமாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாத வாடகை அடிப்படையில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கட்டிடத்தின் கீழ்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கட்டிடத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றிய அதிகாரிகள், கட்டிடம் வலுவிழந்த நிலையில் இருப்பதால் அங்கு யாரும் தங்க வேண்டாம் என எச்சரித்தனர்.
கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.