32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட சங்கம் கோரிக்கை.

Editor Published: August 25, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படுவது போல் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் பாதுகாவலர்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயண வசதி வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும், திருச்செங்கோடு பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், அரசு பஸ்களில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயணம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களிடம் மூன்றில் ஒரு பங்கு பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளதாகவும், அதனை ரத்து செய்து இருவருக்கும் இலவச பயண வசதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், பிற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் நடத்த வேண்டும் என்றும், அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசிய சௌமியா அன்புமணி ராமதாஸுக்கு நன்றி தெரிவித்த சங்கத்தினர், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

About The Author