
நாடு முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026 குறித்து, நாமக்கல் மாநகராட்சி பகுதியில் விதிகளை முறையாக செயல்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வணிக நிறுவனங்களின் நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடையவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026 அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் புதிய விதிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கழிவுகளை வகைப்படுத்தி வழங்க அறிவுறுத்தல்
கூட்டத்தில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் திடக்கழிவுகளை முறையாக கையாளுதல், கழிவுகளை வகைப்படுத்தி சேகரித்தல், அவற்றை மாநகராட்சி பணியாளர்களிடம் முறையாக ஒப்படைத்தல் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை வெற்றிகரமாக செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துடன் வணிக நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் விதிகளை முறையாக கடைப்பிடிப்பதற்காக வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சண். செல்வ பாலாஜி, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மாநகர் நல அலுவலர் கஸ்தூரி பாய், முன்னாள் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், சுப்பிரமணியன், ஜான்ராஜா, நந்தினி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.