32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

உயர் அதிகாரிகள் டார்ச்சர் ?. அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை முயற்சி; வீடியோ வெளியிட்டு பரபரப்பு

Editor Published: July 25, 2026 2 நிமிட வாசிப்பு Updated: July 27, 2026 Breaking News
எழுத்து அளவு:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள செவ்வந்திப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் உதவியாளர் வெண்ணிலா, உயர் அதிகாரிகளின் அணுகுமுறையால் மனவேதனை அடைந்ததாக கூறி அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கன்வாடி மையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வெண்ணிலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை முயற்சிக்கு முன்பு சுமார் 9 நிமிடங்கள் கொண்ட வீடியோவை பதிவு செய்த வெண்ணிலா, கடந்த 9 ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருவதாகவும், செவ்வந்திப்பட்டியில் பணிபுரியும் தன்னை சின்னப்பம்பட்டி அங்கன்வாடி மையத்திற்கும் உணவு கொண்டு செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். உடல்நிலை மற்றும் பணிச்சுமை காரணமாக அதனை செய்ய முடியாது என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் தன் மீது சுமத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் ஆய்வுக்காக வந்த திட்ட அலுவலர் தன்னை அவமரியாதையாகவும் ஒருமையில் பேசியதாகவும், ஆனால் தாம் குழந்தைகளை நன்றாக கவனித்து, தரமான உணவு வழங்கி வருவதாகவும் வீடியோவில் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் தமிழக முதலமைச்சரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கன்வாடி பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிகாரிகளின் அணுகுமுறை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

About The Author