
மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு எதிரான சரத்துகளை திருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.ரத்தினம் தலைமை வகித்தார். இதில் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு எதிரானதாக உள்ள சரத்துகளை நீக்கி, பாரதிய மஸ்தூர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்று சட்டங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி, அகவிலைப்படியும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஓய்வூதியதாரர்களை ஆயுஷ்மான் பாரத் மருத்துவத் திட்டத்தில் இணைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து வகையான திட்டப் பணியாளர்களுக்கும் கௌரவ ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.