
நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிஎன்ஜி (CNG) கேஸ் நிரப்பும் மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு பேருந்துகளுக்கு சிஎன்ஜி கேஸ் நிரப்பும் பணியையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 144 அரசு பேருந்துகள் சிஎன்ஜி கேஸ் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளுக்கான எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்படும் பேருந்துகளில், குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார பேருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அரசு பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு, அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், அதிகாரிகள் தலைமையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.