
மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி பாடி பில்டிங் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, நாமக்கல் லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
நாமக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேசனின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கவேல் கூறியதாவது:
லாரி பாடி பில்டிங் தொழிலை நம்பி நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அரசு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும்.
லாரி பாடி கட்டுமானத்துக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியையும் குறைக்க வேண்டும்.
சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வெளிமாநிலங்களில் இருந்து நாமக்கல்லுக்கு வந்து லாரி பாடி கட்டும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நாமக்கல்லின் முக்கிய தொழில்களில் ஒன்றான லாரி பாடி பில்டிங் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஜிஎஸ்டி பில் தொடர்பாக அதிகாரிகளின் நடவடிக்கைகளாலும் தொழில் நிறுவனங்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை அரசு கவனத்தில் கொண்டு தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்.
லாரி பாடி பில்டிங் தொழிலுக்கு தேவையான திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் வகையில், நாமக்கல்லில் லாரி பாடி பில்டிங் தொழில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
மேலும், சிறு மற்றும் குறு தொழில்களுக்காக அரசு வழங்கி வரும் நிதியுதவி மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் லாரி பாடி பில்டிங் தொழிலுக்கும் உதவிகள் வழங்கி, நலிவடைந்து வரும் இத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என தங்கவேல் வலியுறுத்தினார்.