திருச்செங்கோடு அருகே காங்கேயம்பாளையத்தில் 45 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கிராம சபைக் கூட்டத்தை முற்றுகையிட்டனர்.
கருமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மரவம்பாளையம் மாரியம்மன் கோவில் திடலில் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பிடிஓ நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பூர்ணிமா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கூட்டத்திற்கு வந்து, தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை நிலவி வருவதாக தெரிவித்தனர்.
கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இரண்டு போர்வெல்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகவும், போர்வெல்களில் பழுது ஏற்பட்டதால் 45 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை லாரி மூலம் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதால், ஒட்டுமொத்த கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் பெண்கள் தெரிவித்தனர்.
எனவே போர்வெல் பழுதை உடனடியாக சரிசெய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றும், இதனை கிராம சபை தீர்மானத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பெண்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட பிடிஓ நல்லமுத்து, போர்வெல் பழுதை சரிசெய்து குடிநீர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.