32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 20 புதிய நர்சுகள்: ரூ.15 கோடியில் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் – அமைச்சர் அருண்ராஜ் தகவல்.

Editor Published: August 22, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 20 புதிய நர்சுகள் நியமிக்கப்பட உள்ளதாகவும், வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23.75 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு இரட்டை கதவு ஆட்டோகிளேவ், அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்கோ ஸ்கேன் கருவிகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.6.25 லட்சம் மதிப்பிலான இரட்டை கதவு ஆட்டோகிளேவ் கருவியும், ரூ.17.50 லட்சம் மதிப்பிலான அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்கோ ஸ்கேன் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் கலை அறிவியல் கல்லூரிக்கு, கோவில் நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 1,500 நர்சுகள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதில் 20 நர்சுகள் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 2,500 நர்சுகள் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாணிக்கம்பாளையம், மல்லசமுத்திரம் மற்றும் இறையமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். மேலும், தொற்றுநோய் சிகிச்சை மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட கூடுதல் மருத்துவ சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் அறிக்கைகளை விரைவாக பெற மத்தியமயமாக்கப்பட்ட பிஏசிஎஸ் வசதி கொண்டு வரப்பட உள்ளது. ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு மற்றும் ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்கள் வாங்க கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் – திருச்செங்கோடு சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு பைபாஸ் சாலை பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி – திருமணிமுத்தாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் 7 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும் புதிய அரசு நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிந்தாளந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வாசுதேவன், மாவட்ட நல அலுவலர் டாக்டர் பூங்கொடி, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About The Author