
ராசிபுரம் அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஏரியில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதாகக் கூறி, ஜேசிபி இயந்திரம் மற்றும் மண் ஏற்றிச் சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் அடுத்த பூசாரிபாளையத்தில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஏரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மண் ஏற்றிச் சென்ற டிராக்டர் மற்றும் மண் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். தொடர்ந்து, ஏரியில் மண் அள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏரியில் மண் அள்ளுவதற்கு அரசு தரப்பில் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். குறிப்பாக, 3 அடி ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்ற நிலையில், சுமார் 10 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், ஏரிப் பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள் வெட்டப்பட்டதாகவும், அவற்றை அகற்றிவிட்டு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய மரக்கன்றுகள் நடப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
ஏரியில் மண் அள்ளும் பணியை முறையாக ஆய்வு செய்து, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் ஜேசிபி மற்றும் டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பூசாரிபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.