
நாமக்கல்லில், சிவில் ஓய்வூதியர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அழகிரிசாமி தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களின் செல்லுபடியாக்கும் சட்டம் 2025 எனப்படும் Validation Act-ஐ ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், 2026-க்கு முந்தைய ஓய்வூதியர்களின் ஓய்வூதியத் திருத்தத்தை உறுதி செய்யும் வகையில், 8-வது ஊதியக்குழுவின் குறிப்பு விதிமுறைகளை (ToR) மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஓய்வூதியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் 50 சதவீத அகவிலைப்படியை (DA/DR) இணைக்க வேண்டும், BSNL மற்றும் MTNL ஓய்வூதியர்களுக்கு 2017 முதல் ஓய்வூதியத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
வங்கி ஓய்வூதியத்தை புதுப்பிக்க வேண்டும், 8-வது ஊதியக்குழு பலன்கள் மற்றும் CGHS மருத்துவ வசதிகளை தன்னாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஓய்வூதிய கம்யூட்டேஷன் தொகை பிடித்தம் செய்யப்படும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் 8 மாதங்களாக குறைக்க வேண்டும், CGHS மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், ஓய்வூதியத்தில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வூதியர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.