32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா!

Editor Published: October 11, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தொடங்கி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இவ்விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 7,302 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 16 வட்டாரங்களில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களும், மாவட்டம் முழுவதும் 1,599 குழந்தைகள் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம், செப்டம்பர் 2026 நிலவரப்படி 7,302 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

2026–2027-ம் நிதியாண்டில் நாமக்கல் மாவட்டத்தின் 16 வட்டாரங்களிலும் சுமார் 1,600 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

சீர்வரிசைப் பொருட்கள் வழங்கல்

விழாவில் பங்கேற்ற 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வெள்ளித் தட்டு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், புடவை, ஜாக்கெட் துணி உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் வழங்கினார். மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஐவகை உணவுகளும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, விழாவில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ. சந்திரா, வட்ட திட்ட அலுவலர் பி. போர்ஷியா ரூபி, மாவட்ட நல அலுவலர் க. பூங்கொடி, திருச்செங்கோடு ஆர்டிஓ பி.எஸ். லெனின், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மோகனா, பி. வித்யாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

About The Author