32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன குடோனில் தீ விபத்து -5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதம்.

Editor Published: August 28, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மன் கோயில் எதிரே உள்ள இருசக்கர வாகன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேட்டரி ஸ்கூட்டர்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் என 7 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருச்செங்கோடு நாமக்கல் ரோட்டில் பச்சையம்மன் கோயில் எதிரே பாலச்சந்தர் (44) என்பவருக்கு சொந்தமான கவுண்டர் அண்ட் கோ நிறுவனத்தின் இருசக்கர வாகன குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 30-க்கும் மேற்பட்ட பேட்டரி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குடோன் உரிமையாளர் பாலச்சந்தருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர், குடோனுக்குள் தீப்பற்றியிருப்பதை அறிந்து திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குடோனுக்குள் புகை அதிகமாக சூழ்ந்திருந்த நிலையில், முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகளில் தீப்பற்றியதால் கடும் புகை மற்றும் நெடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடிய தீயணைப்பு வீரர்கள், குடோனுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 7 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் பேட்டரி வாகனங்கள் அதிகளவில் இருந்த நிலையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About The Author