
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரிக் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், போராட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கட்சி மற்றும் மக்கள் அமைப்புகளின் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை எனக் கூறி, டெல்லியில் கைது செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
எலச்சிபாளையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பா. கவிதா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். தமிழ்மணி, சு. சுரேஷ், ஒன்றியச் செயலாளர் ஆர். ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி. கிட்டுசாமி, எம். பாலகிருஷ்ணன், ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ். சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.