இந்திய அஞ்சல் துறையின் நாமக்கல் அஞ்சல் கோட்டம் சார்பில், 30.06.2026 உடன் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக (வீடியோ கான்பரன்சிங்) நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்களது குறைகளை “Regional Level Pension Adalat” என்ற குறிப்புடன் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சல் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மனுக்கள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.08.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோட்ட அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத குறைகள் மட்டுமே, கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பதில் கடிதத்துடன் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் கொள்கை (Policy) தொடர்பான விவகாரங்கள் ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.