
காசநோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முழு கால சிகிச்சையையும் தவறாமல் மேற்கொள்வதுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமையில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் அருண்ராஜ், பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் 820 பேர் சிகிச்சை
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 820 பேர் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
காசநோய் சிகிச்சையில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிப்பதாகவும், குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த உடல் நிறை குறியீடு கொண்டவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து வழங்குவது உடல்நல முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் தெரிவித்தார்.
மருந்துகளை பாதியில் நிறுத்தக்கூடாது
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை 6 மாதங்கள் தொடர்ந்து தவறாமல் உட்கொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
மருந்துகளை ஓரிரு மாதங்கள் எடுத்த பிறகு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குறைந்துவிட்டதை வைத்து நோய் குணமாகிவிட்டதாக நினைத்து சிகிச்சையை பாதியில் நிறுத்தக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மருந்துகளை பாதியில் நிறுத்தினால் நோய் மீண்டும் தீவிரமடைவதுடன், ஏற்கெனவே பயன்படுத்திய மருந்துகள் பலனளிக்காத நிலை ஏற்பட்டு, நீண்ட காலத்திற்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படும் சூழல் உருவாகலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
35 பேருக்கு 6 மாதங்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
காசநோயாளிகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் நோக்கில் நேயம் அறக்கட்டளை மற்றும் திருச்செங்கோடு சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளன.
முதற்கட்டமாக திருச்செங்கோடு வட்டாரத்தில் 25 பேருக்கும், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 10 பேருக்கும் என மொத்தம் 35 பேருக்கு, தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
தலா ரூ.1,050 மதிப்பிலான பெட்டகத்தில் பேரீச்சம்பழம், துவரம் பருப்பு, கோதுமை மாவு, ஊட்டச்சத்து கலவை மாவு, கருப்பு கொண்டைக்கடலை, சிவப்பு கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, அவல் மற்றும் 30 முட்டைகள் இடம்பெற்றுள்ளன.
சத்தான உணவுகளை உட்கொள்ள அறிவுரை
காசநோயிலிருந்து விரைவாக மீண்டு வர புரதச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். முட்டை, காய்கறிகள், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் உள்ளிட்ட சத்தான உணவுகளை உட்கொள்வது உடலின் எதிர்ப்புத்திறனை மேம்படுத்த உதவும் என்றும் கூறினார்.
காசநோயாளிகளுக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களை குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்காமல், நோயாளிகளே முறையாக உட்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், 6 மாத கால சிகிச்சைக்கும் தேவையான ஊட்டச்சத்து பெட்டகங்கள் மாதந்தோறும் தொடர்ந்து இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நோயிலிருந்து முழுமையாக குணமடைவோம் என்ற நம்பிக்கையுடன் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் காசநோய் துணை இயக்குநர் மரு. இர. வாசுதேவன், நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. தி. எழில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. க. பூங்கொடி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு. செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள், காசநோய் பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.