32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டில் செல்போன் பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது.

Editor Published: September 10, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், செல்போனை பார்த்தபடி சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் இருந்து செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் உள்ள கே.எஸ்.ஆர். கல்லூரியில் படித்து வரும் மணிகண்டன், கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து கூட்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். பின்னர் செல்போனை பார்த்தபடி வீட்டை நோக்கி நடந்து சென்றபோது, பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிகண்டன் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் காடச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கமல் செல்லையா (20) என்பதும், ஈரோடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (22) என்பதும், கோழிக்கறி கடையில் கறி வெட்டும் வேலை செய்து வருவதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருடிய செல்போனை வாங்கிய பெண்ணும் கைது

இதையடுத்து, பறித்துச் சென்ற செல்போனை எங்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வெப்படை அருகே நரிப்பாளிக்காடு, தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவிதா (28) என்பவரிடம் செல்போனை விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் முஸ்தபாவின் மனைவியான கவிதா, அந்த செல்போனை வாங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு இளைஞர்கள் மற்றும் திருட்டு செல்போனை வாங்கியதாக கூறப்படும் கவிதா என 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

About The Author