செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு, மத்ரூட், கார்கூடல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு, மத்ரூட், கார்கூடல்பட்டி உள்ளிட்ட Unserved Land பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் வசதி இல்லாததால் நீண்ட காலமாக மக்கள் சிரமம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில், வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அப்போது, குடிநீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்கள், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் போதிய சாலை வசதி இல்லாத பகுதிகளை கிராம மக்கள் அதிகாரிகளுக்கு நேரில் காண்பித்தனர்.
ஆய்வை மேற்கொண்ட அதிகாரிகள், நிலைமையை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக சமர்ப்பித்து, அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “பல ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது டிராக்டர் மூலம் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவதுடன், வறண்டு வரும் விவசாய நிலங்களை பாதுகாக்க போர்வெல் அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும், கிராமங்களுக்கு சாலை வசதியும் செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.