32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு; 3 பேர் கைது

Editor Published: July 28, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வி.நகர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (31) என்பவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தார்.

கடந்த 10-ஆம் தேதி மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் (48), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு (29) மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி (24) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்து, சிறைத் தண்டனை அனுபவித்தபோது ஒருவருக்கொருவர் அறிமுகமானது தெரியவந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், நாமக்கல் பகுதியில் அறை எடுத்து தங்கி, கூட்டாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

About The Author