32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ஊரின் நடுவே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு; எஸ்.பி.யிடம் கிராம மக்கள் மனு

Editor Published: August 6, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம், பரளி அருகே நல்லையம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கோழிப்பண்ணை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) மனு அளித்தனர்.

மனுவில், நல்லையம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கிராமத்தின் நடுப்பகுதியில் மாரியம்மன் கோயில், குலதெய்வக் கோயில், ஊர்க் கிணறு மற்றும் விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் ஒருவர் கோழிப்பண்ணை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் துர்நாற்றம், ஈக்கள் தொல்லை, சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொதுமக்களின் உடல்நல பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோழிப்பண்ணையை அந்த இடத்தில் அமைக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட நபரிடம் பலமுறை வலியுறுத்தியதுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடமும் மனு அளித்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்து கட்டுமானப் பணியை நிறுத்துமாறு நோட்டீஸ் ஒட்டியதாகவும், ஆனால் அந்த நோட்டீசை அகற்றிவிட்டு மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, கோழிப்பண்ணை கட்டுமானப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கிராம மக்களை திரட்டி முற்றுகைப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author