
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் தெருவில் அமைந்துள்ளதாக கூறப்படும் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக மாவட்ட செயலாளர் சுடரழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்போது, சம்பந்தப்பட்ட சுவரை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டதாக விசிகவினர் தெரிவித்தனர். ஆனால், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் தனிநபருக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு விசிகவினர் காவல்துறையிடம் அனுமதி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் கூறி, இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் பந்தல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதனால் விசிகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே பரபரப்பான சூழல் நிலவியது.