32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மழை வேண்டி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு.

Editor Published: August 21, 2026 1 நிமிட வாசிப்பு ஆன்மீகம்
எழுத்து அளவு:

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில், பொதுமக்கள் நலன் மற்றும் மழை வேண்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி வறட்சியான சூழல் நிலவி வருவதுடன், வெப்பமும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து, மழை வேண்டி அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வளாகத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மலைக்கோயில் வளாகத்தில் நாகர் சன்னதி அருகே உள்ள நல்லீஸ்வரர் சன்னதியில், நந்தியம்பெருமான் நீர் தொட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து நல்லீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், மழை வேண்டி ஓதுவார்கள் திருமுறைகளை பாடினர். கோயில் நாதஸ்வர வித்துவான்கள் அமிர்தவர்ஷினி ராகம் இசைத்து சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

நீர் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த நந்தியம்பெருமானுக்கு பக்தர்கள் மலர் தூவி வழிபட்டு, மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் வேண்டினர்.

நிகழ்ச்சியில் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, கோயில் செயல் அலுவலரும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருமான சின்னதுரை, அறங்காவலர்கள் அர்த்தநாரி, பச்சியப்பன், பிரபாகரன், சித்ரா வண்ணக்கண்ணன் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

About The Author