செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில், மாவட்ட கலெக்டர் மதுபாலன் மற்றும் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் வல்வில் ஓரியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, 166 பயனாளிகளுக்கு ரூ.83.98 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்டக் கண்காட்சிகள், மலர் கண்காட்சி, சுற்றுலா பல்லுயிர் கண்காட்சி மற்றும் பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பம், பழங்குடியினர் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பல்வேறு துறை அலுவலர்களையும் கலெக்டர் பாராட்டி கௌரவித்தார்.