செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நாமக்கல் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) க. பார்வதி தலைமை வகித்தார். ஜெனிவா ஒப்பந்தங்களின் மனிதநேயக் கொள்கைகள் மற்றும் போர்க்காலங்களில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
“குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுப்போம்”, “குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்” ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.
“போதைப்பொருள் பயன்பாட்டை எவ்வாறு தடுப்பது?”, “போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவம்” ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு ஓவியப்போட்டி நடைபெற்றது. மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
மேலும், “ஜீன் ஹென்றி டுனான்ட் அவர்களின் வாழ்க்கை வரலாறு” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதன் மூலம் யூத் ரெட் கிராஸ் தோற்றம், ஜீன் ஹென்றி டுனான்ட்டின் மனிதநேயச் சிந்தனைகள் மற்றும் உலகளாவிய மனிதநேயப் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த யூத் ரெட் கிராஸ் மாணவத் தொண்டர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கு ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் நடுவராக செயல்பட்டார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி, இந்தியன் ரெட் கிராஸ் நாமக்கல் மாவட்டச் செயலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக மண்டல யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.