செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருவதால், கோயிலின் அமைதிக்கும், பூஜை முறைகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் முதல்கட்டமாக இன்று முதல் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு கோயில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் செப்டம்பர் 1 முதல் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்வதற்கு தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க கோயில் நுழைவாயில்களில் லாக்கர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.