செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாநகராட்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், “என் குப்பை, எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தார்.
இதில் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மாநகராட்சி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், செல்வகுமார், ஜான் ராஜா, களப்பணி உதவியாளர் சபரிநாதன், தூய்மை பணி மேற்பார்வையாளர் ஜெயராமன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட், பூங்கா ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், நகரின் அழகை பாதிக்கும் வகையிலும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
நகரை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க பொதுமக்கள் தங்களது குப்பைகளை பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும், பொது இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பேனர்களை ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.