32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

சட்டமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; சபாநாயகர் அணுகுமுறையை மாற்ற வேண்டும்” – ஈ.ஆர்.ஈஸ்வரன்

Editor Published: August 17, 2026 2 நிமிட வாசிப்பு தமிழகம்
எழுத்து அளவு:

தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் என்றும், சட்டமன்றத்தை நடத்தும் முறையில் சபாநாயகர் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கொமதேக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை தமிழக மக்களுடன் சேர்ந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். தற்போது சட்டமன்ற விவாதங்கள் தொலைக்காட்சி விவாதங்களைப் போன்று விதண்டாவாதமாக நடைபெறுவது வருத்தமளிக்கிறது.

சட்டமன்றம் தமிழக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான மன்றம். அங்கு நடைபெறும் விவாதங்கள் தமிழக உரிமைகள், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும்.

இதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது. தனது அனுபவத்தை பயன்படுத்தி, தேவையான விவாதங்களுக்கு வாய்ப்பு அளிப்பதுடன், பயனற்ற வாக்குவாதங்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக உலகம் முழுவதும் பார்க்கப்படும் நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான தேவையற்ற வாக்குவாதங்கள் மக்களிடையே தவறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அநாகரிகமான அல்லது கண்ணியமற்ற பேச்சுகளை உறுப்பினர்கள் பேசும்போதே சபாநாயகர் கட்டுப்படுத்த வேண்டும். பேசி முடித்த பிறகு சபைக் குறிப்புகளில் இருந்து நீக்குவது மட்டும் பயனளிக்காது.

இதே நிலை நீடித்தால், சட்டமன்றத்தில் நடைபெறும் வார்த்தை மோதல்கள் கைகலப்பாக மாறும் சூழல் ஏற்படலாம். மேலும், அதன் தாக்கம் சட்டமன்றத்திற்கு வெளியேயும் ஏற்பட்டு தமிழகத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, தமிழகத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, சபையை நடத்தும் அணுகுமுறையில் சபாநாயகர் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

About The Author