
சேலம் அருகே ஓடும் வந்தே பாரத் ரயில் மீது பொருள் வீசப்பட்ட சம்பவத்தில் 2 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற 20671 மதுரை–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி மல்லூர்–சேலம் இடையே சென்று கொண்டிருந்தபோது, ஏசி பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது கல் அல்லது பொருள் வீசப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் ரயில்வே சட்டம் பிரிவு 153-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து சேலம்–மல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், ஆகஸ்ட் 25-ம் தேதி 35 வயதான ரங்கசாமி மற்றும் 39 வயதான தேவேந்திரன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருவரும் காலி மதுபாட்டிலை ரயில் தண்டவாளத்தில் வீசியதாகவும், அந்த பாட்டில் ரயிலில் அடிபட்டு ரயிலின் ஜன்னல் கண்ணாடி மீது சென்று விழுந்ததாகவும் தெரிவித்ததாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூறினர்.
இதையடுத்து இருவரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவத்தை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுத்த சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினரை உயர் ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஓடும் ரயில்கள் மீது கல் அல்லது எந்தவொரு பொருளையும் வீசக்கூடாது என்றும், இதுபோன்ற செயல்கள் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், ரயில்வே சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கக்கூடும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், ரயில் தண்டவாளங்களுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.