32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’

Editor Published: September 30, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’வில் குழந்தைகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும் என புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளரும், பாரதி புத்தகாலய பதிப்பாளருமான கே. நாகராஜன் கேட்டுக்கொண்டார்.

நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து, கே. நாகராஜன் மற்றும் ஏற்பாட்டாளர்கள் செப்.30-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கே. நாகராஜன் கூறுகையில், பாரதி புத்தகாலயம் சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பல்வேறு பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 100 நகரங்களில் ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 25 அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறார் இலக்கியம், அறிவியல், போட்டித் தேர்வுகள், கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகங்கள் பொதுவாக 10 சதவீத தள்ளுபடியிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு 15 சதவீத தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகளுடனும் விற்பனை செய்யப்படுகின்றன.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கதை சொல்லும் நிகழ்ச்சி, உள்ளூர் எழுத்தாளர்களுடன் வாசகர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

அக்டோபர் 1-ம் தேதி காலை மாவட்ட கலெக்டர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து CSIR முதன்மை விஞ்ஞானி ஐயப்பன் “நீங்களும் விஞ்ஞானிதான்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

குழந்தைகள் மத்தியில் புத்தக வாசிப்பை வளர்த்து, புத்தக வாசிப்பை ஓர் இயக்கமாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கம் என தெரிவித்த கே. நாகராஜன், நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் சந்திப்பின்போது நாமக்கல் மாவட்ட கல்வி செயற்பாட்டாளர் A.T. கண்ணன், புத்தக ஆர்வலர் முருகேசன், முன்னாள் மாவட்ட நீதிபதியும் எழுத்தாளருமான விடியல் குகன் என்கிற கு. கருணாநிதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மா. கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

About The Author