
திருச்செங்கோட்டில் இருந்து காசிக்கு ஆன்மீகப் பயணம் சென்ற 67 பக்தர்கள், அமைச்சர் அருண்ராஜின் துரித நடவடிக்கையால் ரயிலைத் தவறவிடாமல் பத்திரமாக ஊர் திரும்பினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 67 பேர், கடந்த 3-ம் தேதி சேலம் வழியாக காசி, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்றனர். தரிசனங்களை முடித்துக் கொண்டு, கடந்த 11-ம் தேதி ஆக்ராவிலிருந்து நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
ஆக்ராவைக் கடந்த சிறிது நேரத்தில் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில் புறப்பட 3 மணி நேரம் தாமதமானது. இதனால், இரவு 9 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய ரயில், நள்ளிரவு 11:30 மணிக்கே சென்னை செண்ட்ரல் வரும் சூழல் ஏற்பட்டது.
சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக, இந்த 67 பயணிகளும் இரவு 11 மணிக்கு புறப்படும் அஹில்யா நகரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர். நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் தாமதமானதால், அவர்கள் அஹில்யா நகரி ரயிலைப் பிடிக்க முடியாத இக்கட்டான நிலை உருவானது. நள்ளிரவு நேரம் என்பதால், வயதானவர்கள் உட்பட 67 பேரும் ரயில் நிலையத்திலேயே தவிக்கும் சூழல் ஏற்பட்டது.
தங்கள் இக்கட்டான நிலை குறித்து பயணிகள் உடனடியாக அமைச்சர் அருண்ராஜுக்கு தகவல் தெரிவித்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமைச்சர், உடனடியாக தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். ஆன்மீகப் பயணம் சென்றவர்களின் நிலையை எடுத்துக்கூறி, அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்:
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நிசாமுதீன் எக்ஸ்பிரஸின் வேகம் அதிகரிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய அஹில்யா நகரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாக புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.
பயணிகள் எளிதாக மாறுவதற்காக, நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் நிற்கும் 2-வது பிளாட்பாரத்திற்கு அருகிலுள்ள பிளாட்பாரத்திலேயே சேலம் செல்லும் ரயிலை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.
அமைச்சரின் சமயோசித நடவடிக்கையாலும், ரயில்வே துறையின் ஒத்துழைப்பாலும் 67 பயணிகளும் எவ்வித சிரமமுமின்றி சேலம் செல்லும் ரயிலைப் பிடித்தனர். தங்களுக்கு நேரிட்ட பெரிய சிக்கலைத் தீர்த்து வைத்த அமைச்சர் அருண்ராஜிற்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் பயணிகள் நெகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்தனர்.
தங்களது பயண சிக்கலை தீர்க்க உதவிய அமைச்சர் அருண்ராஜுக்கு வீடியோ கால் மூலம் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.