32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி மோசடி: தனியார் கல்லூரி முதல்வரின் கூட்டாளியை கைது செய்ய சென்னை விரைந்த நாமக்கல் போலீஸ்.

Editor Published: August 22, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி முதல்வரின் கூட்டாளியை கைது செய்வதற்காக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). பல்வேறு தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றிய இவர், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் மாணிக்கவாசகன், தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கித் தருமாறு கூறி சுரேஷ்குமாரிடம் ரூ.2 கோடி ரொக்கமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் கூறியபடி பதவி வாங்கித் தராததால், மாணிக்கவாசகன் பணத்தை திரும்பக் கேட்டு சுரேஷ்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணிக்கவாசகன் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருச்செங்கோடு, சேலம், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடமும் இதேபோல் அரசு பதவி வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், சென்னையைச் சேர்ந்த வெங்கட் என்பவர் மூலமாகவும் சுரேஷ்குமார் இந்த மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வெங்கட்டை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டால், இந்த மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

About The Author