32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல்லில் தானியங்கி அபராத முறை அமல்: ஏஐ கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு.

Editor Published: August 25, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் வகையில் Intelligent Traffic Management System மற்றும் ANPR கேமராக்களுடன் கூடிய Automated Challan System இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

நாமக்கல் சேலம் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்காணிப்பு முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., முதற்கட்டமாக சேலம் ரோடு சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள ANPR கேமராக்கள் மூலம் வாகனங்களின் இயக்கம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது,செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது ,இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பது ,காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தானாக கண்டறியப்படும்.

விதிமீறல் பதிவானதும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு, விதிமீறல் புகைப்படத்துடன் அபராதம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். செயலி மூலம் அபராதத் தொகையை செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

7 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழக்குப்பதிவு

ஒரே வாகனம் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், ஆரம்பகட்டமாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு 7 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மீண்டும் வழக்குப்பதிவு செய்யும் வகையில் கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாவட்டத்தில் மேலும் 4 முதல் 5 முக்கிய இடங்களில் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் விபத்து அபாயப் பகுதிகளில் (Black Spots) கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாதங்களில் 348 பேர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் சுமார் 348 பேர் உயிரிழந்துள்ளதாக எஸ்.பி. தெரிவித்தார். விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

அதிவேக வாகனங்களுக்கு ஸ்பீட் ரேடார்

இளைஞர்கள் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வது மற்றும் வீலிங் செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் அடுத்தகட்டமாக ஸ்பீட் ரேடார் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இதன் மூலம் வாகனங்களின் வேகம் தானாக கணக்கிடப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறும் வாகனங்கள் மீது தானியங்கி முறையில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

About The Author