
கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு தொடர்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் அடுத்த சின்னவேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேனி (65). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் கடந்த 23-ம் தேதி தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் கைலாயம் செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளார்.
சென்னை சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றதாகவும், பின்னர் சாலை வழியாக நேபாளத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை நேபாளத்தில் பேருந்து மூலம் சுற்றுலா பகுதிகளுக்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் கிருஷ்ணவேனி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவருடைய சகோதரர் பன்னீர்செல்வம், கிருஷ்ணவேனியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், கும்பகோணத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது, சுற்றுலா பயணிகள் மூன்று பேருந்துகளில் சென்றதாகவும், முதல் பேருந்தில் சென்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், மற்ற இரண்டு பேருந்துகளில் பயணித்தவர்களின் நிலை குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கிருஷ்ணவேனியின் நிலை குறித்து நாமக்கல் வட்டாட்சியர் அருள் மற்றும் நாமக்கல் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணவேனியின் கணவர் வாசுதேவன் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார், இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் வெளியூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தாயார் தொடர்பான தகவல் அறிந்த அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருவதாக தெரிகிறது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கிருஷ்ணவேனியின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காததால், அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கவலையில் உள்ளனர்.