கருகும் நிலையில் உள்ள வெற்றிலை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற, ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என நாமக்கல் தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 16,200 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இப்பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை, வாழை, கரும்பு, பாக்கு, கோரை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக ராஜாவாய்க்கால் பகுதியில் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது.
வெற்றிலை பயிருக்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ள நிலையில், ஒரு ஏக்கர் வெற்றிலை சாகுபடிக்கு சுமார் ரூ.15 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் நிறுத்தம்
இந்த நிலையில், மேற்கண்ட 5 பாசன வாய்க்கால்களிலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக விவசாயிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை என எம்.பி. தெரிவித்துள்ளார்.
தண்ணீர் இல்லாததால் வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக வெற்றிலை பயிரை தினமும் தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிர்கள் முற்றிலும் கருகிவிட்டால் மீண்டும் வெற்றிலை சாகுபடியை தொடங்குவதற்கான தாய் செடிகளை பெற விவசாயிகள் ஆந்திர மாநிலத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, 5 பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.