32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழப்பு.

Editor Published: September 4, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்தும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் போயர் தெரு பகுதியைச் சேர்ந்த சேகர்–அமுதா தம்பதியரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி (19), நிவேதா (16), தனுஸ்ரீ (13). இவர்களது உறவினரான ரமேஷ்பாபு–வசந்தா தம்பதியரின் மகள் அபிநயா (11).

இதில் சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நிவேதா எலச்சிபாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும், தனுஸ்ரீ 7-ம் வகுப்பும், அபிநயா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய சுபிதா கலைச்செல்வி, எலச்சிபாளையம் அரசு பள்ளியில் இருந்து தனது தங்கைகள் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் உறவினரான அபிநயா ஆகியோரை மொபட்டில் அழைத்துக் கொண்டு சக்கராம்பாளையம் நோக்கி சென்றுள்ளார்.

சக்கராம்பாளையம் பிரிவு சாலை அருகே மொபட்டில் சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது.

விபத்தில் மொபட்டில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற 2 பேர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் மற்றும் திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை வளைவில் தொடரும் விபத்துகள்

விபத்து நடைபெற்ற பகுதியில் சாலை வளைவாக இருப்பதால், எதிரே வரும் வாகனங்கள் சரியாகத் தெரியாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், விபத்துகளைத் தடுக்க சாலைத் தடுப்புகள் மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

About The Author