செய்தியைக் கேட்க / Listen to News
திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் டைமிங் பிரச்னை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு சென்ற இரண்டு தனியார் பஸ்கள், நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் ஈரோடு செல்லும் பிரதான ரோட்டில் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பஸ்களையும் பறிமுதல் செய்து, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை எச்சரித்தனர்.
திருச்செங்கோட்டில் இருந்து சேலம், ஈரோடு, வேலூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகவே தனியார் பஸ்களுக்கு இடையே டைமிங் பிரச்னை நீடித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல் அல்லது பிற காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பஸ் பஸ் ஸ்டாண்டுக்கு வராதபட்சத்தில், பின்னால் வரும் பஸ் பயணிகளை ஏற்றிச் செல்வதால், தாமதமாக வரும் பஸ்சுக்கு பயணிகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக தனியார் பஸ்கள் ஒன்றையொன்று முந்திச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்ட இரண்டு தனியார் பஸ்கள், டைமிங் பிரச்னையால் பஸ் ஸ்டாண்ட் முதல் சந்தைப்பேட்டை வரை போட்டி போட்டுக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் சந்தைப்பேட்டை அருகே இரண்டு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு செல்லும் பிரதான ரோட்டில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை எச்சரித்தனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இரண்டு தனியார் பஸ்களையும் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
மேற்கண்ட பஸ்களில் பயணம் செய்த மாணவர்கள் மாற்று பஸ்களில் அனுப்பப்பட்டனர். இதனால் சந்தைப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு ரோட்டில் இதுபோன்ற தனியார் பஸ் போட்டிகள் காரணமாக கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தனியார் பஸ்களின் டைமிங்கை போக்குவரத்துத் துறை முறைப்படுத்தி, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.