32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

‘ஊசிகூடபோடமாட்டேங்குறாங்க..!’அமைச்சரிடம்  107 வயதுபாட்டிகண்ணீர்புகார்

Editor Published: June 18, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது, 107 வயது மூதாட்டி கண்ணீர் மல்க அளித்த புகாரும், ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக பிரசவம் நடைபெறாததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், சிறிய பிரச்னைகளுக்குக் கூட திருச்செங்கோடு மற்றும் சேலம் ஜிஹெச் களுக்கு  அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சுகப்பிரசவங்களை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து நேற்று காலை அமைச்சர் அருண்ராஜ் மல்லசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் டாய்லெட் பகுதிகள் பராமரிப்பின்றி இருந்ததைக் கண்டு உடனடியாக தூய்மைப்படுத்த உத்தரவிட்டார்.

பிரசவ வார்டை ஆய்வு செய்தபோது அனைத்து படுக்கைகளும் காலியாக இருந்தன. டாக்டர்களிடம் கேட்டபோது, “இந்த மாதம் ஜீரோ டெலிவரி” என தெரிவித்தனர். கொரோனா காலத்திற்கு முன்பு மாதம் 30 முதல் 50 பிரசவங்கள் நடந்த நிலையில், தற்போது பிரசவமே நடைபெறாதது குறித்து அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.

ஆய்வின்போது 107 வயதான பாக்கியம் என்ற மூதாட்டி, “உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு வரும்போதெல்லாம் சத்து ஊசி போட மறுக்கிறார்கள். சிடுசிடுவென பேசுகிறார்கள்,” என கண்ணீர் மல்க முறையிட்டார். இதையடுத்து அமைச்சர் அவரை ஆறுதல் கூறி உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ராம்ப் பகுதி பூட்டப்பட்டு, அங்கு பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இதற்கு கடும் அதிருப்தியை தெரிவித்த அமைச்சர், உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

பின்னர் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசிய அமைச்சர், “மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வளவு வசதிகள் உள்ள ஆஸ்பத்திரியில் ஒரு மாதமாக பிரசவம் நடைபெறாதது ஏற்க முடியாது. மீண்டும் இதுபோன்ற புகார்கள் வரக்கூடாது,” என கடும் எச்சரிக்கை விடுத்தார்.

About The Author