32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

சத்திநாயக்கன்பாளையம், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸ் முற்றுகை.

Editor Published: July 22, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில்பாளையம் அம்மன் நகரில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் பஞ்சாயத்து ஆபீசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு அடுத்த சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து, கோவில்பாளையம் பகுதியில் உள்ள அம்மன் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூலி வேலைக்குச் செல்லும் ஏழை எளிய மக்கள், தங்களது அன்றாட வருவாயில் பெரும் பகுதியை தண்ணீரை விலைக்கு வாங்குவதற்கே செலவிட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பொறுமையிழந்த அம்மன் நகர் பகுதி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், இன்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் காலி குடங்களை கைகளில் ஏந்தியபடி சத்திநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து ஆபீஸ் முன்பு தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரியும், தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தியும் காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் குழாய்கள் மூலம் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் சமரசப் பேச்சை ஏற்று பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

About The Author