32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

பள்ளி, பஸ் நிலையம் அருகே இயங்கிய டாஸ்மாக் கடை அதிரடி மூடல்: திருச்செங்கோடு மக்கள் நிம்மதி

Editor Published: May 17, 2026 2 நிமிட வாசிப்பு Updated: July 2, 2026 திருச்செங்கோடு
எழுத்து அளவு:

திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் அதிரடியாகப் பூட்டினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, விதிமீறலாகச் செயல்படும் கடைகளைக் கண்டறிந்து அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டவுன் பகுதியில் வருவாய்த்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளால் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகாமையிலும், ஸ்டேட் பேங்கிற்கு எதிரேயும் டாஸ்மாக் மதுபானக் கடை (கடை எண்: 6193) நீண்ட காலமாக இயங்கி வருவது கண்டறியப்பட்டது. இதேபோல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் இருந்து பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் ரோட்டில் செயல்பட்டு வந்த மதுபானக் கடையும் கோயிலுக்கு மிக அருகாமையில் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு மதுக்கடையானது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் பேங்கிற்கு செல்லும் வழியிலும், கோயிலுக்கு செல்லும் வழியிலும் அரசின் 500 மீட்டர் தடை விதிமுறைக்கு உட்பட்ட தூரத்தில் அமைந்திருந்தது. இதனையடுத்து, தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றி, அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடை எண் 6193 நேற்று அதிகாரப்பூர்வமாகப் பூட்டப்பட்டது.  இதேபோல் பத்ரகாளியம்மன் கோயில் அருகே செயல்பட்ட மதுக்கடையும் பூட்டப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் முக்கிய பேங்கின் எதிரே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்ததால், அவ்வழியாகச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் என அனைவரும் குடிமகன்களால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். போக்குவரத்து நெரிசலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. தற்போது அரசின் நடவடிக்கையால் இந்தக் கடைகள் நிரந்தரமாகப் பூட்டப்பட்டுள்ளதால், திருச்செங்கோடு டவுன் பொதுமக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

About The Author