32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

குமாரபாளையம் அருகே நீரோடை ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு.

Editor Published: September 27, 2026 1 நிமிட வாசிப்பு குமாரபாளையம்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாணார்பாளையம் பகுதியில் நீரோடை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான நிலத்திற்குச் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாணார்பாளையம் பகுதியில் குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குச் செல்லும் பாதை ஓடை வழியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாதையை நீண்ட காலமாக அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நகராட்சி அதிகாரிகள் தங்களது நிலத்திற்குச் செல்ல பாதை இல்லாதது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

மேலும், நீரோடை செல்லும் பாதை என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான நிலத்திற்குச் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்ட சாணார்பாளையம் கிராம மக்கள், குமாரபாளையம் நகராட்சியின் குப்பைக் கிடங்கு அமைப்பதற்காக பாதை அமைக்கப்படுவதாக கூறி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் மற்றும் குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சமரசம் ஏற்பட்டதை அடுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

About The Author