32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை.

Editor Published: August 20, 2026 1 நிமிட வாசிப்பு ராசிபுரம்
எழுத்து அளவு:

ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (41). இவர் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவருக்கும் சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா (20) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஷ், டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என பிரியாவை வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இரவு, தனது மருந்துக் கடையில் இருந்து விஷ ஊசி மருந்தை எடுத்துச் சென்று, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரியாவுக்கு செலுத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விஷ ஊசி செலுத்தப்பட்டதில் பிரியா வாயில் நுரை தள்ளி உயிரிழந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழில்வேலன், ராஜேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

About The Author