
ராசிபுரம் அருகே பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி, விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், தங்கராஜ், சுந்தர்ராஜன், பூபதி உள்ளிட்ட விவசாயிகளிடம், புதுச்சத்திரம் அருகே செம்மாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, டிராக்டர் விற்பனை நிலையம், நிலம் விற்பனை, கார் வாங்கி விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என அவர் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு தங்கராஜிடம் டிராக்டர் விற்பனை நிலையம் அமைப்பதாக கூறி சுமார் ரூ.55 லட்சம் பெற்றதாகவும், பின்னர் தொழில் தொடங்காமல் ஏமாற்றியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சுந்தர்ராஜனிடம் நிலம் விற்பனை செய்வதாக கூறி சுமார் ரூ.15 லட்சம் பெற்றதாகவும், அவரது பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று புதிய டிராக்டர் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது அந்தக் கடனுக்காக ரூ.12 லட்சத்துக்கும் மேல் செலுத்த வேண்டியுள்ளதாக குறுஞ்செய்திகள் வருவதாகவும் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுபோல் புதுச்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோரிடம் பல்வேறு தொழில் முதலீடுகளை காரணம் காட்டி பணம் பெற்றதாகவும், மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் உள்ளூர் காவல் நிலையங்களில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தங்களிடம் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்படும் சுரேஷ் மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பு: இந்த செய்தியில் இடம்பெறும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த புகார்களின் அடிப்படையிலானவை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகவில்லை.